தேனி மாவட்டத்தில் சின்னமனூர், பாளையம், கம்பம், பாலார்பட்டி, கூழையனூர், லெட்சுமிபுரம், கொடுவிலார்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் ரஸ்தாளி, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது கரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக சந்தை, கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளும் நேரக்கட்டுப்பாடுகளுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள செவ்வாழை குலைகள் மரத்திலேயே வெடித்து தொங்குகின்றன.
இது குறித்து கொடுவிலார்பட்டி பகுதியைச் விவசாயி சாமிக்கண்ணு கூறுகையில், “பொதுவாக செவ்வாழை பழங்கள் கிலோ ரூ.40 முதல் ரூ.50வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதுண்டு. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் மொத்த வியாபாரிகளின் வருகை நின்றது. இதனால் சந்தைக்கு காய்கள் அனுப்பப்படாமல் தோட்டத்திலேயே தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக காய்கள் பறிக்கப்படாமல் மரங்களிலேயே விடப்பட்டு தற்போது பழுத்து வெடித்துள்ளன” என்றார்.
மேலும், வியாபரிகள் விவசாயிகளிடம் பேரம் பேசி கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாழை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க...ரயில்பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!