100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா - 100 நாள் வேலை
தேனி : ஆண்டிபட்டி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதி வரையில் நாளொன்றுக்கு சராசரியாக 200, 300 பேர் என கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நூற்றுக்கும் குறைவானோரே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தேனி மாவட்ட மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 நபர்கள் உள்பட இன்று (செப்.14) 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்ட 14 நபர்களும் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர இவர்களுடன் பணியாற்றியவர்கள், உறவினர்கள் என நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு சுகாதாரத் துறையினரால் பரிசோதிக்கப்பட உள்ளனர்.
மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜி.உசிலம்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனாவால் அக்கிராமத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தற்போது வரை 13 ஆயிரத்து 833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 45 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.