தேனி: போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் அருகில் அமைந்துள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில், சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுள் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் விடுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில், கஞ்சா மற்றும் மது போதை பிரியர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், விடுதிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மதுபான பிரியர்களுக்கு இடையே ஏற்படும் தகராறில் மாணவர்கள் தாக்கப்படுவதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது மாணவர்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (டிச.10) விடுதிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களை அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சில நபர்கள் குடிபோதையில் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, கல்லூரி மாணவர் மற்றும் மது பிரியர்கள் மத்தியில் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்தவர்கள் கல்லூரி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் அது குறித்து மாணவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, தங்கள் விடுதியில் இருந்து போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று, பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.