'வீட்டுக்கு ஒரு விருட்சம்' ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்று நடவு - தஞ்சை ஆட்சியர் தஞ்சாவூர்: தஞ்சையில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் பேசுகையில், "தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் 'வீட்டுக்கு ஒரு விருட்சம்' ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம், கடந்த ஆண்டு உலக புவி தினமான ஏப்ரல் 22 அன்று குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்று நடப்பட்டது.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை மற்றும் வன பரப்பினை அதிகப்படுத்துவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதுநாள் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்றுப்படுகைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதில் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசை வனம், சமுத்திரம் ஏரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பறவைகள் வனம், மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் ஆழி வனம் ஆகியன சிறப்புக்குரியதாகும்.
இந்நிலையில் தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் - ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் ஒரு லட்சமாவது கன்றினை மாவட்ட ஆட்சியர் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஏலகிரி மலைப்பாதையில் காரை ரிவர்ஸில் இயக்கி சாகசம்.. பரபரப்பு வீடியோ!