தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ்லே–அவுட் பகுதியில் வசித்து வந்தவர் முருகன். பூ வியாபாரியான இவருக்கு கேரள மாநிலம் மூணாறு, போடியில் பூக்கடைகள் உள்ளன. இவரது மகன் பாலமுருககனேஷ்-க்கும் போடி மதுரைவீரன் வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
வரதட்சணை, கணவர் குடும்பத்தாரின் சித்ரவதை காரணமாகவே கடந்த ஜூலை மாதம் வீட்டில் இருந்த லிங்கேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக லிங்கேஸ்வரியின் தந்தை மகாராஜன் அளித்த புகாரின்பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தனது சகோதரி லிங்கேஸ்வரி மரணத்திற்கு பழி தீர்ப்பதற்காக அவரது சகோதரரான சுந்தர் போடியில் உள்ள முருகனின் பூக்கடைக்குச் சென்று அவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது சுந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தார்.