தேனி:கம்பம்மெட்டு அருகே உள்ள மந்திபாறை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்த ஆபிரகாம் என்பவர், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான கம்பம் மெட்டு அருகே உள்ள மந்திபாறை என்ற இடத்தில் நேற்று, முழுவதும் எரிந்த நிலையில் ஆணின் உடல் ஒன்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல் இருந்த இடம் தமிழக வனப்பகுதி மட்டுமின்றி, கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், தகவல் அறிந்த கம்பம் தெற்கு காவல் துறையினர் மற்றும் தமிழக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையும் படிங்க: தஞ்சை இளம்பெண் ஆணவக் கொலை - பெண்ணின் பெற்றோர் உள்பட 8 பேர் கைது!
பின்னர், கருகிய நிலையில் இருந்த உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கம்பம் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் எரிந்த நிலையில் இருந்தது ஒரு சர்ச் பாதிரியாரின் உடல் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இறந்தவர் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஆபிரகாம் (56) என்பதும், அவர் கம்பம் மெட்டு அருகே உள்ள மந்திபாறை என்ற பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் கடன் பிரச்சினை காரணமாக தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கூறப்படுகிறது.
எனினும், இது குறித்து கம்பம் தெற்கு காவல் துறையினர் இன்னும் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக நிர்வாகி கொலை மிரட்டல்: வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் குழந்தைகளுடன் வீதி வீதியாக அலைந்து வரும் பெற்றோர்..