தேனி:தேனி மாவட்ட பாஜக தலைவராக பி.சி.பாண்டியன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பி.சி.பாண்டியனை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் தொகுதி வாரியாக நாடாளுமன்ற பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு பொறுப்பாளராக ராஜபாண்டியன் என்பவரையும் மற்றும் இணை பொறுப்பாளராக ராமநாதன் என்பவரையும் நியமித்துள்ளனர். இதில் ராமநாதன் என்பவர், திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த ராமநாதனை இணை பொறுப்பாளராக அறிவித்தது, தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டத் தலைவர் பி.சி.பாண்டியன், ராமநாதனிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவரை பொறுப்பாளராக பரிந்துரை செய்ததாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.