தேனி: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பத்திற்கும் மேற்பட்டோரைக் கொன்ற அரிக்கொம்பன் ஒற்றை காட்டு யானையைக் கடந்த மாதத்தில் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் யானையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அதன் கழுத்துப் பகுதியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பெரியார் புலிகள் வன சரணாலய பகுதிக்குள் அரிக்கொம்பன் விடப்பட்டது.
பின்னர், அங்கிருந்த தமிழக வனப்பகுதியான ஹைவேவிஸ் மேகமலை பகுதிக்குள் உலா வந்த அரிகொம்பன் அங்கிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தியும், மேகமலை சாலையில் வந்த அரசு பேருந்தை வழிமறித்து அச்சுறுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதனால் மேகமலை பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
பின்னர் அங்கிருந்து பல கிலோமீட்டர் பயணித்த அரிக்கொம்பன் லோயர் கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்து, கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. பகல் நேரத்தில் தோட்டுப்பகுதிக்குள் தஞ்சம் அடையும் அரிக்கொம்பன் அதிகாலை நேரத்தில் இடம் பெயரும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த அரிக்கொம்பன் யானையைப் பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தமிழக வனத்துறையினர், கேரள வனத்துறையினர் உதவியுடன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவி கொண்டு அதன் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி காலையில், கம்பம் நகர்ப் பகுதிக்குள் திடீரென புகுந்த அரிக்கொம்பன் அங்கிருந்த பொதுமக்களை விரட்டத் தொடங்கியது. இதனால் கம்பம் நகர்ப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நகராட்சி சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் எச்சரிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மீண்டும் தனியார் தோட்டத்திற்குத் தஞ்சம் புகுந்த அரிக்கொம்பன் அங்கேயே தங்கியிருந்தது. அப்போது யானையை படம் பிடிப்பதற்காக சில இளைஞர்கள் யானை தஞ்சம் அடைந்துள்ள தோட்டுப்பகுதிக்குள் ட்ரோன் கேமராவை பறக்க விட்டபோது அதை பார்த்து எரிச்சல் அடைந்த அரிக்கொம்பன் அப்பகுதியை விட்டு வெளியேறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் மீண்டும் அரிக்கொம்பனை பின் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் 28-ஆம் தேதி அதிகாலை கம்பம் பகுதியிலிருந்து சுருளிப்பட்டி அருகே உள்ள யானை கஜம் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிக்கொம்பன், அங்கிருந்த விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி அப்பகுதியில் தஞ்சம் அடைந்தது.
இதனால் சுருளிப்பட்டி அருகே உள்ள சுருளி அருவிக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். பின் அங்கிருந்து அடுத்த நாள் காலை கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணைப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் யானை புகுந்தது. கிராமப் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டதால் மீண்டும் கிராமப் பகுதிகளுக்கு வரவிடாமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.