உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு நாளொன்றுக்கு 20 முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் முகக் கவசம், கிருமிநாசினி மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க தமிழ்நாடு அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியை நாடியுள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் இயங்கும் புதுமை மகளிர் சுய உதவிக்குழுவினர், இந்த பணிகளில் மும்முரமாக இயங்கி வருகின்றனர். சமீப காலமாக சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பல சாதனைகளை புரிந்த இவர்கள், தற்போது கிருமி நாசினி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட் மகளிர் திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின்படி கிருமிநாசினி தயாரிக்கும் ஒரே மகளிர் குழுவும் இவர்கள்தான்.
இது குறித்து இவர்கள் கூறுகையில், "இந்த மருந்து தயாரிப்பதற்காக பயன்படுத்தும் மூலப்பொருட்களை கலந்து பெரிய கேனில் சுமார் 30 மணி நேரம் ஊற வைப்போம். பின்னர் இதில் தண்ணீரையும் வைட்டமின் - ஈ நிறைந்த கற்றாழைச் சாறையும் கலந்து தனி தனி பாட்டீல்களில் ஊற்றி விற்பனை செய்கிறோம்." என்றனர். இப்படி தயாரிக்கப்படும் இந்த கிருமி நாசினி மருந்து அரை லிட்டர் பாட்டீல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான மூலப் பொருட்களை வாங்குவதற்காக மகளிர் திட்டம் சார்பில் முன்பணமாக ரூ 50,000 இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.