தேனி:திமுக அரசில் ஏற்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்குச்சீர்கேடு ஆகியவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தங்களின் செல்வாக்கினை காட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அதிகளவு ஆட்களை திரட்ட முடிவு செய்து சுமார் 5000-த்திற்கும் மேற்பட்டவர்களைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கினைக் காட்டினார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆர்.பி. உதயகுமார், திமுக அரசைக் கண்டித்து நடந்த போராட்டத்தை மறந்து முழுக்க முழுக்க ஓ.பன்னீர்செல்வத்தை குறி வைத்தே பேசினார்.
ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், 'ஓ.பன்னீர்செல்வம் அன்று நடத்தியது தர்ம யுத்தம். இன்று அவர் நடத்துவது துரோக யுத்தம். தேனி மாவட்டம் விசுவாசமானவர்கள் மிகுந்த மாவட்டம்; ஆனால், அந்த விசுவாசமுள்ளவர்கள் உள்ள மாவட்டத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு துரோகி.
சொந்த கட்சிக்கே துரோகம் இழைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் சிரிக்கும் சிரிப்பு துரோகச்சிரிப்பு. திமுகவினரைப் பார்த்து தினமும் சட்டப்பேரவையில் கும்பிடு போடுகிறவர் ஓ.பன்னீர்செல்வம்' எனக் கூறினார்.
மேலும், 'கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திர நாத்தை கடின உழைப்பு மூலமாக வெற்றி பெற வைத்தோம்.
அவருக்கு தேனி மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை. அவருக்கு செல்வாக்கு இருந்தால் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும். அவ்வாறு அவர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால், தான் அரசியலுக்கு முழுக்குப்போட்டு போகத் தயார். அவர் இனிமேல் முழுக்க முழுக்க மாலத்தீவிலேயே இருப்பார்’ என ஆர்.பி. உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை அவரின் சொந்த மாவட்டத்தில் முன் வைத்துப் பேசினார்.
'துரோகத்தின் மொத்த உருவம்' - ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் அவரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் இதையும் படிங்க:திருப்பூர் குமரன், பொல்லானுக்கு நினைவு மண்டபம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு!