தேனி மாவட்டம் குரங்கணி அருகே உள்ளது முதுவார்க்குடி மலைக்கிராமம். மா, இலவம், எலுமிச்சை உள்ளிட்ட விவசாயப் பணிகளை இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் செய்து வருகின்றனர். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இந்த மலைக்கிராமத்திற்கு சாலைப் போக்குவரத்து வசதியில்லை. ஆதலால், அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை போடியிலிருந்து வாங்கி வந்து குரங்கணியிலிருந்து குதிரை, கழுதைகள் உதவியுடன்தான் தங்களது வசிப்பிடத்திற்கு அம்மக்கள் எடுத்துச் செல்வர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் இக்கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. குடும்ப அட்டை உள்ள மலைக்கிராம மக்கள் நியாய விலைக்கடையில் அரசின் நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர். அட்டை இல்லாதவர்களால் அரசின் உதவித்தொகை, ரேசன் பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது.