கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து விற்கப்படும் கஞ்சாவால் படிக்கும் வயதிலேயே போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் பலர் ஆளாகின்றனர். மேலும் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், மூணாறு அருகே உள்ள கட்டப்பனை பகுதியில் வசிக்கும் மனு தோமஸ் (30) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அவரது வீட்டில் உள்ள படுக்கையறை அருகில் தனியாக, ஒரு இடம் ஒதுக்கி, கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைதுசெய்த, கேரள மாநிலம் - கட்டப்பனை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.