கம்பத்தில் களைகட்டிய இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம்! தேனி: மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் மாவட்ட மக்கள் வெகுவாக மதித்துவருகின்றனர். அவரது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அப்போது மாட்டு வண்டி பந்தயம் நடப்பது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் பென்னிகுவிக்கின் 182ஆவது பிறந்தநாள் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜனவரி 20) தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரில் 5 மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தையத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 -க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் இந்த போட்டியில் பங்கு பெற்று, பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் மாடுகளையும், மாட்டு வண்டி ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
மேலும், மாட்டுவண்டி பந்தையம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், நடுமாடு, கரிச்சான்மாடு, இளஞ்சிட்டு என 7 வகையான பிரிவுகளில், போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது கூடலூரிலிருந்து பென்னிகுவிக் மணிமண்டபம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: காலை உணவு திட்டத்தால் வருகை பதிவு அதிகரித்துள்ளது - அமைச்சர் கீதா ஜீவன்