தேனி:அமர்நாத் புனித யாத்திரைக்கு ஆன்மிக சுற்றுலாவாகச் சென்றவர்கள் அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தைத் தொடர்ந்து பலரும் முகாம்களில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் இந்த முகாம்களில் கடந்த 4 நாட்களாக உணவின்றித் தவித்து வருகின்றனர். ஆகவே, தமிழ்நாடு அரசு விரைந்து அங்கு சிக்கியுள்ள தங்களை மீட்டு தமிழ்நாடு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சங்கர்(77) என்பவர், அடிக்கடி புனித யாத்திரையாக பல கோயில்களுக்குச் சென்று வருபவர். அந்தவகையில், ஆன்மிக சுற்றுலாவாக வட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குழு ஒன்றை அமைத்து, தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நபர்களை சுற்றுலாவாக அழைத்துச்சென்று வருவதை வழக்கமாக செய்து வருகிறார்.
அதன்படி கடந்த ஜூலை 4ஆம் தேதி சங்கர் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 21 பேர் கொண்ட யாத்திரை குழுவினர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக காஷ்மீரில் உள்ள பால்டால் பள்ளத்தாக்குப் பகுதிக்கு 7ஆம் தேதி சென்றனர். அதன் பின்னர், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய கடும் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை வணங்கினர். அன்று இரவு கோயிலில் தங்கிய பின் மறுநாள் 8ஆம் தேதி புறப்பட்டு 14 கிலோ மீட்டர் நடந்து கீழே இறங்கி பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர்.