தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று இரவு தொடங்கி ஐந்து நாட்களுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கு, கடந்த 28ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று(பிப்.18) இரவு மாசி மகா சிவராத்திரியில் திருவிழா தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான நேற்று கோவிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மன் ஓலை பெட்டியில் குழந்தையாக மிதந்து, பிறகு மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், செங்கரும்பு கட்டுகளை காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதேபோல் கோபுரமே இல்லாத கோவிலில் அடைத்த கதவுக்கே பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 22ஆம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது.