நீலகிரி:கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக இறந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறை அதிகாரிகள் தெப்பக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதில் 26 காட்டுப் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல் அங்கேயே தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதுகுறித்து முதுமலைப் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், 'முதுமலைப் புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை. வனப் பணியாளர்கள் குழுக்களாக சென்று வனப்பகுதியில் உள்ள புதர்களில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.