தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை மூலம் 64 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்.
நீலகிரியில் 64 நடமாடும் காய்கறி வாகனங்கள்!
நீலகிரி: குன்னூரில் நடமாடும் காய்கறி வாகனங்களை பழங்குடியினர் கிராமங்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அனுப்பி வைத்தார்.
காய்கறித் தொகுப்பு பைகள் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பொருள்கள் உள்ளன. குன்னூர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளான உபதலை, அருவங்காடு, மேலூர், தூதூர்மட்டம், வண்டிச்சோலை, கேத்திபாலாடா உள்ளிட்ட இடங்களுக்கும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி, மலை மாவட்டமாக இருப்பதால் காலை ஏழு மணி முதல் மதியம் 1 மணிவரை காய்கறி, பழங்கள் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைபொருள்களைச் சந்தைப்படுத்தி, பொதுமக்களை பயனடையச் செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கிராமப்புறங்களிலும் தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்: முதலமைச்சர் உத்தரவு