நீலகிரி:கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் மளிகைக் கடையில் பணிபுரிந்து வந்தவர் ராஜா (45). இவருக்கு அமுதா (40) என்ற மனைவியும், சிவசங்கரி (15) என்ற மகளும் மற்றும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள், குடும்பமாக இன்று (செப்.6) தங்களது எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் உதகைக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.
அப்போது உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மந்தாடா பேரின்ப விலாஸ் பகுதியில், எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, இவர்களின் பின்னே அதிவேகத்தில் கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி, எக்ஸெல் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு வயது குழந்தை மற்றும் தாய் அமுதா உயிர் தப்பிய நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜா மற்றும் மாற்றுத் திறனாளியான அவரது மகள் சிவசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேத்தி காவல் நிலைய ஆய்வாளர் நாகமணி தலைமையிலான காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் உதயராஜை கைது செய்தனர்.
உதகை - குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்கள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் பயணிக்கக் கூடிய லாரி ஓட்டுநர்கள், நேரத்தை சரி செய்ய ஒரு சில இடங்களில் லாரிகளை அதிவேகமாக இயக்குகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மலைப் பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு நாட்களில் வாகன விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்து உள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விரைவில் சீர் செய்ய வேண்டும் எனவும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை குறைந்த வேகத்தில் மலைப் பாதையில் இயக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை.. ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கொலைகளால் மக்கள் பீதி!