நீலகிரி: ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே உள்ள துலிப் மலர்கள் முதன்முறையாக உதகை அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துள்ளது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலர் கண்காட்சிக்காகக் காஷ்மீர் மற்றும் ஹாலந்து நாட்டிலிருந்து துலிப் (Tulip) மலர்கள் கொண்டுவரப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதன்முறையாகப் பூங்கா பண்ணையிலேயே விதைக்கப்பட்டுப் பூத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் சிறந்து விளங்கும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சியானது சிறந்து விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாக்களில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு உலக சுற்றுலாப் பயணிகள் வரை வருகை தருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மலர் கண்காட்சிக்குப் பூங்கா தயாராகி வருகிறது.
குறிப்பாக ஆயிரக்கணக்கான மலர் ரகங்கள் காட்சிப்படுத்தப்படும் நிலையில், காஷ்மீர், டெல்லியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் துலிப்ஸ் மலர்கள் கொண்டுவரப்பட்டுக் காட்சிப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக பூங்காவில் உள்ள நர்சரியில் துலிப் மலர் விதைகள் நடப்பட்டு தற்போது இந்த பூக்கள் பூத்துள்ளன. அவை வெள்ளை, ரோஸ், மஞ்சள், இளஞ்சிவப்பு உள்ளிட்ட 5 வண்ணங்களில் பூத்துள்ள துலிப் மலர்கள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.