ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி தலைமையில், தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று(ஜூன் 5) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது, தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், ஆய்வுப் பொருட்களை கண்டறிந்து பல்கலைக்கழகங்கள் அதனை தமிழில் மொழிபெயர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்என்.ரவி பேசும்போது, "நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து, கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டது. தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு படை ஏடுத்தன. கால மாற்றத்திற்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழகம் வளரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.
இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இளைஞர்களுக்கு காலத்திற்கு ஏற்ற கல்வி கிடைக்காததால், அவர்களின் திறன் பாதிக்கப்பட்டு, இதனால் மாநிலம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே கல்வியில் மாற்றம் அவசியம்.