நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் உள்ளது, அரசு உயர்நிலைப்பள்ளி. சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர், இரவு காவலர் இல்லாத நிலையில் பாதுகாப்பு சம்மந்தமான பணிகளை செய்து தரக்கூறி, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) மாலை பள்ளியின் மேல்தளத்தில் ஒரு சத்தம் வந்த நிலையில் பள்ளியின் இளநிலை உதவியாளர் மோகன் மேல் தளத்திற்குச் சென்று பார்த்தார். அப்போது ஒரு பள்ளி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பள்ளி அறையைத் திறந்து பார்க்கும்போது வேறொரு கதவு வழியாக அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேவர்சோலை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த நபர் பல இடங்களில் திருடிய மடிக்கணினிகள், கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் பள்ளியின் பின்புறம் பார்க்கும்போது, கடந்த வாரம் கூடலூரில் திருட்டுப்போன ஒரு இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.