நீலகிரி: மாவட்டத்தில் சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதாகவும் அதில் சிலர் விதி மீறி தனியார் தங்கும் விடுதிகளை நடத்தி வருவதாகவும் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதிகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 38 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் விடுதி உரிமையாளர்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகம் யானைகள் வழித்தடம் குறித்து தவறான தகவல்களை அளித்து உள்ளதாக கூறினர்.