தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தளமாக இருப்பது நீலகிரி மாவட்டம். இதற்குப் பெருமைசேர்க்கும் அம்சங்களில் மிக முக்கிய அம்சமாக இருப்பது நீலகிரி மலை ரயில். இயற்கையின் ரம்மியத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மாவட்டத்தில் தொடர்கள், சினிமாக்களின் படப்பிடிப்புகள் நடைபெறுவதும் வழக்கம்.
மலை ரயிலில் மீண்டும் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் மலை ரயில் பயணமும் ரத்துசெய்யப்பட்டது.
இந்த நிலையில் எட்டு மாதங்களுக்குப் பின் இன்று கேத்தி ரயில் நிலையத்தில் 'அவுட் ஆஃப் லவ் சீசன் 2' என்ற இந்தி வெப் சீரியலுக்காக படப்பிடிப்பு நடைபபெற்றது. ஒருநாள் படப்பிடிப்புக்கு மலை ரயிலைப் பயன்படுத்த முன்வைப்புத் தொகையுடன் ஐந்து லட்சம் ரூபாயை சென்னை ரயில்வே நிர்வாகத்தில் செலுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு மலை ரயிலை இயக்கி, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல மாதங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் இதனை நம்பியுள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர்.