நீலகிரி:குன்னூர் அருகே பள்ளி மாணவன் மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹாதி கார். ஓட்டுநர் தொழில் செய்து வரும் இவரின் மகன் அப்துல் ஆஷிக் (வயது 13 ) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட். 20) விடுமுறை நாள் என்பதால் அப்துல் ஆஷிக் அவரது நண்பர்களுடன் குன்னூர் அருகே உள்ள பார்க் சைடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார்.
பார்க் சைடு எஸ்டேட் பகுதியில் "எக்கோ ராக்" என்று அழைக்கப்படும் மலைப்பகுதி உள்ளது. பார்க் சைடு எஸ்டேட் மற்றும் நான் சச் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான இம்மலைபகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆஷிக், எதிர்பாராதவிதமாக மலை உச்சியில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அவரின் நண்பர்கள் பயந்து, தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அவர்களின் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவாகியும் அப்துல் ஆஷிக் வீட்டிற்கு வராததால் அவரின் தந்தை அப்துல் ஹாதி மேற்குன்னூர் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க:ஈரோடு அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை கொலை
அதனைத்தொடர்ந்து, அப்துல் ஹாதி மகனை காணவில்லை என்று அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளார். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் ஆஷிக்கின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த விசாரணையில் நண்பர்கள் மூவரும் எக்கோ ராக் மலை பகுதிக்கு சென்றதாகவும் அப்பொழுது அப்துல் ஆஷிக் தவறி விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேல் குன்னூர் இன்ஸ்பெக்டர், வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், தீயனைப்புதுறை அலுவலர் கிருஷ்ணன்குட்டி மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் ஆஷிக் தவறி விழுந்த எக்கோ ராக் மலைப்பகுதி பள்ளத்தில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்துல் ஆஷிக்கின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் அப்துல் ஆஷிக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்துல் ஆஷிக் மரணம் குறித்து கொலக்கம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செருப்பு கடையில் தீ விபத்து.. மர்ம நபர் தீ வைத்ததாக பரவும் சிசிடிவி காட்சிகள்..!