நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிங்காரா வன பகுதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஆண் காட்டு யானை ஒன்று தும்பிக்கையில் பலத்த காயத்துடன் வந்தது. அந்த யானையைக் கண்ட சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து யானையின் தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயம் குணமடைய பழங்களில் மருந்து, மாத்திரைகள் வைத்து கொடுக்கப்பட்டது.
அந்த காட்டு யானை பொதுமக்களுடன் சகஜமாக பழகியதால் பிரபல கால்பந்து வீரர் ரிவால்டோவின் பெயர் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அமைதியாக இருந்த ரிவால்டோ கடந்த சில மாதங்களாக விவசாய நிலம், குடியிருப்புக்குள் நுழைந்தது.
இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே ரிவால்டோவின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுவாச பிரச்னையும் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளிக்க புலிகள் காப்பக வனத்துறையினர் முடிவு செய்தனர்.