தீண்டாமை ஒழிப்பு நிதி சேகரிப்புக்காகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தி, குன்னூரில் தங்கிய இல்லம், இன்றளவும் உள்ளூர் மக்களின் மனதில் நினைவுச் சின்னமாக உள்ளது. 1934ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியிலுள்ள, நாகேசுவர ராவ் என்பவரின் இல்லத்தில் தங்கினார்.
ஆதி திராவிடர் ஜன சபாவில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினார். கோத்தகிரியில் படுகர், பட்டியலின மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் மது ஒழிப்பு, குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர், குன்னூர் அருகே உள்ள ஒட்டுப்பட்டறை பகுதிக்குச் சென்று அங்கு மக்களிடம் அன்பாகப் பேசி, கடவுள் பெயரில் விலங்குகளைப் பலியிடுவதை நிறுத்த கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஊட்டி மைதானத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். தீண்டாமை ஒழிப்புக்கு பணம், பொருட்கள் ஆகியன சேகரிக்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, காந்தல் ஓம் பிரகாஷ் மடத்தைப் பார்வையிட்டு, மடம் சுத்தமாகப் பராமரிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். மீண்டும் குன்னூர் நாகேசுவர ராவ் வீட்டில் தங்கினார்.