தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

T23 புலியின் காயங்கள் குணமடைந்து வருகின்றன - வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் - புலியின் காயங்கள் குணமடைந்து வருகிறது

மசினக்குடி பகுதியில் பிடிபட்ட டி-23 புலிக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால், புலியின் உடம்பிலுள்ள காயங்கள் குணமடைந்து வருவதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

T23 புலியின் காயங்கள் குணமடைந்து வருகிறது
T23 புலியின் காயங்கள் குணமடைந்து வருகிறது

By

Published : Oct 20, 2021, 3:21 PM IST

நீலகிரி:கூடலூர், மசினக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் கால்நடைகள், நான்கு மனிதர்களை வேட்டையாடிக் கொன்ற டி23 புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி மசினக்குடி வனப்பகுதியில் புலியை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட புலியின் உடலில் காயங்கள் இருந்ததால், அதனை மைசூர் உயிரியல் பூங்கா மற்றும் மீட்பு மையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

தற்போது டி23 புலி குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'மைசூரு உயிரியல் பூங்கா மீட்பு மையத்திலுள்ள டி23 புலி சில நேரம் தவிர மற்ற நேரங்களில் நன்றாக இருக்கிறது. காடுகளில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டதால் மன அழுத்தம் இருக்கலாம்.

புலிக்கு வனக்கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது.

இதனால் புலியின் முன் கால் வீக்கம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் (அக்.18) சுமார் 8 கிலோ மாட்டிறைச்சியை புலி உணவாக எடுத்துக்கொண்டது. ஆனால், எலும்புகளை உட்கொள்ளவில்லை. தொடர் சிகிச்சையால் புலிக்கு உடம்பிலுள்ள காயங்கள் குணமடைவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

ஆக்ரோசமாகும் டி23 புலி

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மேம்படுகிறது. முதல்முறையாக, அதன் அளவு 9க்கு மேல் சென்றது.

கல்லீரல் லேசான வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் சிகிச்சையளிக்க செல்லும்போது, ஒரு சில நேரங்களில் புலி ஆக்ரோஷமாக உள்ளது.

புலி அடைக்கப்பட்டுள்ள கூண்டின் தடுப்புக்கம்பிகளைக் கடிப்பதால், அதன் கோரை பல் உடைந்துள்ளது.

கால்நடை மருத்துவர்களைக் கண்டால் சில நேரங்களில் ஆக்ரோசமாகும் டி23 புலி, நேற்று (அக்.20) பசுமையான பாதுகாப்பு வேலி கொண்ட திறந்த வெளியில் விடப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:T 23 புலி உடல்நிலையில் முன்னேற்றம்

ABOUT THE AUTHOR

...view details