நீலகிரி: தமிழ்நாட்டின் மலைகளின் அரசி என்று நீலகிரி அழைக்கப்படுகிறது. நீலகிரி என்றாலே நினைவுக்கு வருவது அங்கு நிலவும் குளுகுளு காலநிலையும், பழங்குடி இன மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம், தேயிலை, மலைக் காய்கறிகள், நீலகிரி தைலம், பூங்கா, படகு இல்லம், வர்க்கி, சாக்லெட் உள்ளிட்டவை தான். இதில் அனைத்து தரப்பு மக்களையும் சுவையால் உட்கொள்ள வைப்பது ஊட்டி வர்க்கி என்றால் உங்களால் நம்பமுடியுமா?. இதன் சுவையை அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.
அப்படிப்பட்ட வர்க்கிகளைத் தயாரிக்கும்போது அடுமனைகளில் இருந்து வீசும் மணம், அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆவலைத் அனைவரிடமும் தூண்டிவிடும். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் ஊட்டிக்குச் சென்றாலோ அல்லது அங்கிருந்து வந்தாலோ கண்டிப்பாக வாங்கி வரச்சொல்லி கேட்பது, பாரம்பரிய உணவான 'கர கர' "மொறு மொறு" வென இருக்கும் இந்த ஊட்டி வர்க்கியைத் தான்.
வறவறவென்று இருப்பதால் என்னவோ, இதற்கு 'வறக்கீஸ்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. பின் நாளடைவில் அது 'வர்க்கி' என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது. பல இடங்களில் வர்க்கி தயாரிக்கப்பட்டாலும், நூற்றாண்டைக் கடந்து சிறப்புற்றிருக்கும் ஊட்டி வர்க்கிக்கு இருக்கும் மவுசே தனிதான் எனக் கூறலாம். அதனால் தான் தற்போது 'புவிசார் குறியீடு' என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெறுகிறது. நீண்ட காலமாகவும், தலைமுறைகளைக் கடந்தும் வர்க்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியையும், 'ஊட்டி வர்க்கி தயாரிப்பாளர்கள்' என்ற தனித்த அடையாளத்தையும் கொடுத்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் அல்லது அடையாளம் ஆகும். இது புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ன் படி நிர்வகிக்கப்படுகிறது. ஊட்டி வர்க்கி புவிசார் குறியீடு பெற்ற பின், அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். அங்கீகாரம் பெறாதவர்கள் தயாரிக்க முடியாது. இதனால் ஊட்டி வர்க்கி என்ற பெயரை தவறாகப் பயன்படுத்த முடியாது. மேலும் நுகர்வோரின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தேவை அதிகரிக்கும் என பல நன்மைகள் உள்ளது.
தேநீருடன், ஊட்டி வர்க்கியைச் சாப்பிடுவது என்பதே ஓர் அலாதி இன்பம் தான் எனலாம். இதை இயந்திரங்களிலோ, கருவிகளின் உதவியாலோ தயாரிக்க இயலாது. முழுக்க, முழுக்க மனிதவளத்தைப் பயன்படுத்தி தான் தயாரிக்க முடியும். மைதா, சர்க்கரை, நெய், எண்ணெய், தண்ணீர், உப்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆகையால், தயாரிப்பில் மிகுந்த கவனம் அவசியம். ஊட்டி வர்க்கியில் சிறிய வர்க்கி, பெரிய வர்க்கி, சாதா வர்க்கி, ஸ்கொயர் வர்க்கி, மசாலா வர்க்கி என 10 வகைகள் உள்ளன. இவை நீலகிரி மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது.