நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து, மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நீலகிரி மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்தும், பாறைகள் விழுந்தும் ரயில் தண்டவாளம் பாதிப்பு அடைந்தது. இதனைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, ரயில் தண்டவாளங்களில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த நிலையில், கடந்த 22 நாட்களாக மேற்கொண்ட பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையில் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. இதன்படி, இன்று (டிச.14) காலை 7. 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு 10.30-க்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்து. இதில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.