நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் செப்டம்பர் 24ஆம் தேதி வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்குப் பதுங்கியிருந்த புலி அவரைத் தாக்கியதில் தலை, முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி சந்திரன் உயிரிழந்தார்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள், நான்கு மனிதர்களைப் புலி கொன்றுள்ளதால், அதனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
புலியைப் பிடிக்க கூண்டு
இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. தேவன் எஸ்டேட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 100 வனத் துறையினர் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒன்பது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ட்ரோன் கேமரா மூலமும், மரங்களின் மீது பரண் அமைத்தும் புலியின் இருப்பிடத்தைக் கண்டறிய வனத் துறையினர் முயற்சித்தனர்.
வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன், ராஜேஷ்குமார் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டனர். புலி நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத் துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
புலியைப் பிடிக்க முடியவில்லை
ஆனால் புலியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அந்தப் புலியைச் சுட்டுக் கொல்லும்படி, முதன்மைத் தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.
புலியைக் கொல்ல வேண்டாம்
இந்த வழக்கு அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீலகிரியில் உலவும் டி23 புலியைக் கொல்லும் திட்டம் ஏதும் இல்லை. புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தமிழ்நாடு வனத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.