நீலகிரி :தென் மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்-அமைச்சர் ராமசந்திரன் நீலகிரிமாவட்டம் குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெகதளா பேரூராட்சியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், காரக்கொரையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அதன் பின் சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை என்று இரண்டு பருவ மழை பெய்கிறது. தென்மேற்குப் பருவ மழை கூடலூர், குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்கிறது. வடகிழக்குப் பருவ மழை குன்னூர், கோத்தகிரி, கீழ்கோத்தகிரி போன்ற இடங்களில் பெய்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29 மீ.மி., அதிக மழை பெய்துள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று சிறப்பு கூட்டம் நடத்தபட்டு, துறை சார்ந்த அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளோம். இதனையடுத்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாவட்டம் முழுவதும் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:வாழ்வாதாரத்தை இழந்த குடிசை தொழிலாளிகள்: செவி சாய்க்குமா தமிழக அரசு?
பாதிப்பு ஏற்படும் பகுதிகளான 283 இடங்களில் அபாயகரமான பகுதிகள் என்று கண்டறியபட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்க 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு மையங்களில் மக்களுக்குத் தேவையன உணவு மற்றும் மருந்து ஆகிய அத்தியவசியப் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1077 என்ற எண்ணை அழைத்தால் பொதுமக்களுக்கு உரிய உதவி மற்றும் நடவடிக்கைகள் அரசின் மூலம் எடுக்கப்படும். அதுமட்டும்மல்லாமல் 200 ஆத்ம மித்ரா பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ளனர். மேலும் மழை காலங்களில் மக்களுக்கு உதவ வரும் தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சியை அரசின் மூலம் வழங்க தயாராக உள்ளோம்.
தேசிய மீட்பு படை வீரர்கள் 40 -க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 20 பேர்கள் ஊட்டி பகுதியிலும், 20 பேர்கள் கூடலூர் பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் சிறப்பாக உள்ளன. இதனால், தென்மேற்குப் பருவ மழையால் எந்த விதமான பிரச்னைகள் வந்தாளும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :ஒகேனக்கல்: தரமற்ற லைஃப் ஜாக்கெட் உடன் பரிசல் பயணம்..திக் திக் நொடிகள்..