நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இந்தியாவிலேயே பழமையான புலிகள் காப்பகம் ஆகும். இந்த மிகப்பெரிய புலிகள் காப்பகத்தில் அதிகரித்து வரும் உண்ணிச் செடிகளால் வன விலங்குகளுக்கு உணவுகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த உண்ணிச் செடிகள் படர்ந்து அதிகமாக வளர்வதால், அதன் கீழே புல் உள்ளிட்ட எந்த ஒரு தாவரமும் முளைப்பது இல்லை என தாவரவியலாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தாவர உண்ணிகள் தங்களுடைய உணவைத் தேடி வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த உண்ணிச் செடிகளை அழிக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெட்ட குறும்பா என்ற பழங்குடியின மக்களுக்கு தனியார் அமைப்பு மூலம் உண்ணிச் செடிகளை கொண்டு பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, உண்ணிச் செடிகளால் ஆன டீப்பாய், நாற்காலி மற்றும் மேஜை உள்ளிட்ட மரப் பொருட்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் மூலம் யானைகளின் உருவத்தையும் செய்ய கற்றுக் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த முயற்சி பலன் அளித்தது. முதலில் கம்பிகளைக் கொண்டு யானையின் உருவத்தை அமைத்தனர். பின்னர், உண்ணிச் செடிகளை சுடு நீரில் வேக வைத்து யானையை உருவாக்கி வருகின்றனர். இவை பல்வேறு தரப்பு மக்களிடம் வரவேற்பைப் பெற்று உள்ளது.