உதகை அருகே உள்ள மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது நீலகிரி: உதகை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்திபெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், பக்தர்கள் கரகங்கள் எடுத்து வழிபாடு நடத்தினர். இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று (பிப்.27) இரவு நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 10 மணியளவில் வடம் பிடிக்கப்பட்ட தேர், கோயிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழி நெடுகிலும் சிங்க வாகனத்தில் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பினை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.
மேலும் காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன் திருத்தேர் வீதி உலா வந்தது. இவ்வாறு இன்றுடன் (பிப்.28) நிறைவு பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த திருவிழாவில் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகியப் பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பிப்ரவரி 25ஆம் தேதி அன்று மாலையில் திருவிளக்கு பூஜையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய முன்தினம் (பிப்.26) கங்கை பூஜை நடைபெற்றது. இதற்காக நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தரப்பில் போக்குவரத்து பாதையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க:வீரப்பூர் பொன்னர்-சங்கர் வேடபாரி திருவிழா: களைக்கட்டிய பொன்னர் அம்பு போடும் வேடபரி!