நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2 வருடங்களாக எஸ்.பி அம்ரித் பதவி வகித்து வந்தார். கடந்த 7-ஆம் தேதி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை மாற்றி உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.பி அம்ரித் சென்னை நில நிர்வாக கூடுதல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மு.அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (செப்.13) உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 115-ஆவது ஆட்சியராக மு.அருணா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர்களை தடுக்க நவீன முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் சரியான முறையில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.