நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஆதிவாசி கிராமங்களில் தொற்று பரவாத நிலையில் இந்தாண்டு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
குறிப்பாக போதிய போக்குவரத்து வசதி கூட இல்லாத தென்குமரஹாடா பகுதியில் உள்ள அள்ளிமாயார், கல்லம்பாளையம், புதுகாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருளர் இன ஆதிவாசி மக்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டோரை அங்கு பணியாற்றி வரும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத், ஒற்றை ஆளாக போராடி சிகிச்சையளித்து வருகிறார்.
இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கிராமங்களுக்கு அருகே ஓடும் மாயார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் நீர் குறைய இரண்டு நாளாவது ஆகும் என்ற நிலையிலும், மருத்துவர் அருண்பிரசாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களைப் பரிசல் மூலம் உயிரை பணயம் வைத்து ஆற்றின் மறுபகுதிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருந்து, பாதிக்கப்பட்டோரை 108 ஆம்புலன்ஸில் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.
மக்களை பரிசலில் அழைத்து செல்லும் மருத்துவருக்கு பாராட்டு இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தெங்குமரஹாடா பகுதி மக்கள் மாயார் ஆற்றை கடந்து அருகில் உள்ள பவானி சாகர் பகுதிக்கு அடர்ந்த வனப் பகுதி வழியாகச் சென்றடைய சுமார் 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.