நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, கோடநாடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றினர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் இது தொடர்பாகப் பேச ஆளுநரைச் சந்தித்தனர். அரசியல் களத்தில் தற்போது இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படுவதுதான்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆஜரான சயான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவன் தூண்டுதலின்பேரில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.