குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது,
"தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வாய்ப்பு அளித்ததற்காகத் தமிழ்நாட்டில் நீட் தேர்வை திமுக எதிர்த்துவருகிறது. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
மேற்குவங்க ஆளுநர் சட்டப்பேரவையைத் தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவு பிறப்பித்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதால்தான் மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கியதாக ஆளுநர் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். எனவே விவரம் தெரியாமல் ஸ்டாலின் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் ஹிஜாப்க்குத் தடை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டம் கூறியிருப்பதுபோல் கல்வி நிறுவனங்களில் அனைவரும் ஒரே மாதிரியான சீருடையைத்தான் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும். பாஜக தமிழ்நாட்டை ஆளும்போது இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம், கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுக்கு இடமில்லை.
தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் முதல் பாலியல் வன்கொடுமைகள் வரை அரங்கேறிவருவது இதற்கு எடுத்துக்காட்டு. ஸ்டாலின் மடியில் கனமில்லை என்றால் இது தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. திமுகவின் கொள்கைகளே ஆட்சியின் கொள்கையாக இருப்பது ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை: 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை...