நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை: 2 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்! - அவலாஞ்சி
நீலகிரி: நீலகிரியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான இடங்களிலுள்ள மக்களை பாதுகாப்பு படையினர் மீட்டு எமரால்டு பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு உணவு, போர்வைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ், எமரால்டு பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று அங்கு தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், அவலாஞ்சி பகுதியில் சிக்கியிருந்த 45 பேரில் 4 பேருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களை பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு அழைத்து சென்றனர்.