மாராத்தானில் கலந்துகொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டம், உதகையில் ஊட்டி அல்ட்ரா 2023 என்ற தலைப்பில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து ஊட்டி அல்ட்ரா என்ற தலைப்பில் ஊட்டி 200 பிரபலப்படுத்தும் நோக்கில் மாராத்தான் ஓட்டப்பந்தயம் இன்று ( ஏப்.02 ) நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாராத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறுகையில், “நீலகிரியில் விளையாட்டுப் பூங்கா அமைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மாத காலங்களாக உலக நாடு முழுவதும் கரோனா தொற்று இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்பட்டு YBA, Ba2 என்று புதிய தொற்று தற்போது பரவி வருகிறது.
இந்தியாவில் முழுமையாக நாள்தோறும் 50க்கும் கீழ் இருந்த தொற்று தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. குறிப்பாக 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 24 மணி நேரத்தில் 300 நபர்களிலிருந்து 700 நபர்கள் வரை புதிய தொற்றின் தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 139 நபர்களுக்குப் புதிய தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வகை தொற்றானது மருத்துவமனைகளில் அதிகளவு பரவுவதால் தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரத்து 333 அரசு மருத்துவமனைகளில் உள்ள உள் மற்றும் புற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர், பார்வையாளர்கள் 1ஆம் தேதி முதல் 100 விழுக்காடு முகக்கவசம் அணிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு படுக்கை வசதியுடன், ஆக்சிஜன் போதுமான அளவிற்கு மருந்து, மாத்திரை வசதியுடன் தயார் நிலையில் இருக்கிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தி உள்ளது.
இவ்வகை தொற்று பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என மருத்துவ வல்லுநர்களும், அறிவியல் ஆய்வாளர்களும் கூறியுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வகை தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது அயல்நாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வரும் துபாய் மற்றும் சிங்கப்பூர் பயணிகளுக்கு தொற்று அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்’’ என்றார். இந்த மாராத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி அவதூறு வழக்கு - தீர்ப்பை எதிர்த்து ராகுல் நாளை மேல்முறையீடு?!