நீலகிரி: உதகையை அடுத்த இத்தலார் கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு 65 லட்சம் மதிப்பீட்டிலும், ஹேப்பி வேலி புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 60 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் 1.25 கோடி செலவில் புதிய மருத்துவ கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டினார்கள். இதனைத் தொடர்ந்து புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளையங்கி அணிவிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கூடலூர் பகுதியில் ரூ.31 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. உதகை மருத்துவக் கல்லூரியில் 600 படுக்கை வசதியுடன் 15க்கும் மேற்பட்ட அதி நவீன சிகிச்சையுடன் எதிர் வரும் ஜூலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அல்லது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்படும். நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் எனப் போற்றப்படும் தோடர் இன மக்களுக்கென வசதி கொண்ட தனி அறைகள் அவர்களுக்குத் தனியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.