நீலகிரி: சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும், யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், யானைகள் குறித்த விழிப்புணர்வுக்காக கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம், யானைகளால் காடு வளம் பெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும், யானைகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தன் ட்விட்டர் பக்கத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த மனதை உருக்கும் நெகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், முதுமலை காட்டில் பிறந்து மூன்று வாரங்களே ஆன குட்டி யானை அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் தனது குடும்பத்தை பிரிந்து வேறு பகுதிக்கு சென்றது.
இதையும் படிங்க:காற்று மாசுவினால் புற்று நோய்: ஆபத்து நுரையீரலுக்கு மட்டும் அல்ல.!
இதனை கண்ட வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு பேணி பாதுகாத்து வந்தனர். ஆஸ்கர் வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் நாயகன் பொம்மன் தான் இந்த யானையை வளர்த்து வந்தார். யானை தனது குடும்பத்தை பிரிந்த வருத்ததில் சத்தம் போட்டு கொண்டே இருந்த நிலையில் அதற்கு பால் குடுத்து வனத்துறையினர் பேணி காத்தனர். பின்னர் யானையின் குடும்பத்தினரை கண்டுபிடித்த வனத்துறையினர் குட்டியை அதன் தாயுடன் இணைக்க முயற்சித்தனர்.
பின்னர் யானை குட்டியை அதனுடைய குடும்பத்தினர் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று வனத்துறையினர் விட்டனர். தனது குட்டியை பார்த்த தாய் யானை அரவணைத்து அழைத்து சென்றது. பின்னர் வனத்துறையினர் குட்டி யானை நலமாக உள்ளதா என அறிய முதுமலையில் ட்ரோன் மூலம் பார்த்தனர். அந்த குட்டி யானை இரண்டு பெண் யானையின் கால் அடியில் படுத்து தூங்கும் காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்தது.
இதனை பகிர்ந்த வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு "இந்த மாதிரியான தருணங்கள் தான் நம்மை ஊக்கப்படுத்துகின்றன மேலும் முதுமலை தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுக்கள் எனவும் குட்டி யானை தனது குடும்பத்துடன் இணைய ஆஸ்கார் நாயகன் பொம்மன் பெரிதும் பங்களித்துள்ளார்" எனக் குறிபிட்டு உள்ளார்
இதையும் படிங்க:உலக யானைகள் தினம்: யானைகளை ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி?