நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. கனகராஜ் சாலை விபத்தில் இறந்தபோது அவருடைய செல்ஃபோன் பதிவுகளை அழித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர்களை கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அக்டோபர் 26ஆம் தேதி அன்று தனிப்படை காவல் துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
குற்றவாளிகளின் பிணை மனு மீது விசாரணை இதனையடுத்து தனபால் மட்டும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும் கொலை, கொள்ளை வழக்கின் மறு விசாரணை இன்று (அக்.29) நடைபெற உள்ள நிலையில், தனபால் மற்றும் ரமேஷ் தரப்பில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இக்கொலை வழக்கில் 12ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரமேஷிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் சார்பில் இன்று (அக்.29) மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு - தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி