நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பணி நிமித்தமாகக் கோவை சென்று விட்டு குன்னூர் திரும்பிய வழியில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அதே பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோத்தகிரி அஜூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன், முன்னாள் ராணுவ வீரர் தர்மன் (56) பெண் போலீஸ் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில் தட்டிக் கழித்த பெண் காவலர் ஒரு கட்டத்தில் தர்மனைத் தாக்கியுள்ளார். அதற்குத் தர்மன் அந்த பெண் காவலரைத் திருப்பித் தாக்கியுள்ளார். பேருந்திலிருந்தவர்கள் தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, “எனக்கு எஸ்பி தெரியும், டிஎஸ்பி தெரியும்” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு பேருந்து பயணிகள் ஒரு வேலை நிஜமாக இருக்குமோ என்று பின்வாங்கியுள்ளனர்.
பின்பு பேருந்து நடத்துநரும் தர்மனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காட்டேரி பகுதியில் தர்மனைக் காப்பாற்றுவதாகக் கருதி இறக்கி விட்டுள்ளார். பெண் காவலரை காட்டேரியில் இறங்க வேண்டாம் என்றும் நடத்துநர் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் காவலரும் தர்மனை பின் தொடர்ந்து காட்டேரியில் இறங்கியுள்ளார்.