குன்னூர் அருகே பூங்காவிற்குள் புகுந்த காட்டு யானைகள் நீலகிரி: குன்னூர் பகுதி அருகே நேற்று இரவு பூங்காவிற்குள் நுழைந்த 10 காட்டு யானைகள் பூங்காவின் வேலிகள், புல் மேடுகள் ஆகியவற்றை சேதப்படுத்திய நிலையில், சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வர அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் கூடிய 10 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உலா வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், நேற்று இரவு குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டேரி பூங்காவிற்குள் புகுந்த அந்த யானை கூட்டம், பூங்காவை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. மேலும், பூங்காவில் உள்ள புல் மேடுகள் மற்றும் வேலி ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய காட்டெருமை.. உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த வனத்துறையினர்.. தென்காசியில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!
இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பூங்காவிற்கு வர அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படுவதற்கு முன், வனத்துறையினர் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து காட்டு யானைகளை மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் குன்னூர் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் எனவும், காட்டு யானைகளை கண்டவுடன் அவற்றுக்கு அருகில் சென்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை!