தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரிழந்த குட்டி யானை... மீட்க போராடும் தாய்... நெகிழ்ந்த மக்கள்...!

நீலகிரி: கூடலூர் அருகே உயிரிழந்த குட்டி யானையை விட்டுவிலகாமல் 30 மணி நேரமாக பாசப்போராட்டம் நடத்தி வரும் தாய் யானையின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother elephant
mother elephant

By

Published : Nov 28, 2019, 1:02 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பந்தலூர் தாலுகா நாயக்கன்சோலை பகுதியில் ஏழு காட்டு யானைகள் கொண்ட கூட்டம் உலா வந்தது. அதில், குட்டி யானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து நேற்று முன்தினம் (நவ.26) இரவு உயிரிழந்தது. யானகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் குட்டியானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தாய் யானையின் பாசப்போராட்டம்

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர், குட்டி யானை இறந்து கிடப்பதையும், தாய் யானை அதை சுற்றி நின்று யாரையும் நெருங்க விடாமல் நிற்பதையும் பார்த்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நாயக்கன்சோலை கிராமத்துக்கு வந்த அலுவலர்கள், யானையை விரட்டி விட்டு இறந்த குட்டியை உடற்கூறாய்வு செய்தனர். இதனிடையே, தாய் யானை குட்டி இறந்ததை அறியாமல் அதை எழுப்புவதற்கு முயற்சி செய்து வந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து, குட்டி யானையை மீட்க வனத்துறையினர் கயிறு கட்டி டிராக்டர் மூலம் சாலை பகுதிக்கு இழுத்தனர். அப்போது ஆக்ரோஷமடைந்த தாய் யானை, அங்கிருந்த வனத்துறையினரின் இரண்டு அரசு வாகனம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியது.

மேலும், தனது குட்டி இறந்த நிலையில் தாய் யானை 30 மணி நேரமாக பாசப் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குன்னூர் பகுதியில் பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details