நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தில் பல் சக்கரத்தால் ரயில் பெட்டிகளை இழுத்து செல்கிறது.
அடர்ந்த வனப்பகுதியில் மலை முகடுகள், பாறை குகைகளுக்கும் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழைக் காலங்களில் இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளங்கள் சேதமடைவது தொடர் கதையாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மலை ரயில் பாதை அமைந்துள்ள ஹில்கிரோ ஆடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது
இதன் விளைவாக இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 160 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலை ரயில் கல்லார் ரயில் நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மண்சரிவை சீரமைக்க பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பணிகள் முழுமை பெற கால தாமதம் என்ற தகவலை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனையடுத்து கல்லார் ரயில் நிலையத்தில் இருந்து மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ரயில்வே நிர்வாகம் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பேருந்து மூலம் குன்னூர் அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க வந்த ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்தில் சென்றனர்.
இதையும் படிங்க: குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ் உடன் கோலாகலமாக நடந்த ஊட்டி சர்வதேச பள்ளி நிறுவனர் விழா!