சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமீபகாலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால் சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கின்றன.
இந்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதிகள் அருகே உள்ள யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதால், சாலைகள், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கும் வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடம் அழிப்பு!
நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடத்தை அழித்து சாலை விரிவாக்கப் பணி நடப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில் தண்ணீர் தேவைக்காக யானைகள் கடந்துசெல்லும் வழித்தடத்தை அழித்து, நெடுஞ்சாலைத் துறையே விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே, இந்தப் பகுதியில் யானைகள் கடந்துசெல்லும் வழித்தடம் தொடர்பான வனத் துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் அகற்றப்பட்டுள்ளது. தற்போது நெடுஞ்சாலைத் துறையினர் அவற்றைப் பொருட்படுத்தாமல் சாலை விரிவாக்கப் பணி என்று கூறி அதன் வழித்தடத்தில் ஜேசிபி உதவியுடன் அழித்துவருகின்றனர்.
யானைகளின் வாழ்விடங்களை அழித்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அரசு துறையே யானை வழித்தடத்தை அழிக்கும் செயல் அரங்கேறிவருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.