சென்னை:ஸ்பைஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைஸ் நிதி நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஸ்பைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘ஆகாஷ் ஸ்பைசஸ் லிமிடெட்’. இந்த நிறுவனங்கள் மசாலா பொருள்கள், மிளகு, ஏலக்காய், தேயிலை உள்ளிட்ட பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகிறது.
குறிப்பாக பொதுமக்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதிகள் அளித்து விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய பொதுமக்கள் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மத்திய அரசின் ஒழுங்கற்ற முதலீடு திட்ட தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்பைஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட் மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
மேலும், மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான துரைராஜ் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் நிறுவனத்திற்கு தொடர்புடைய தாம்பரம் மற்றும் முகப்பேரில் அமைந்துள்ள இடத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றுள்ளனர். அந்த இரண்டு இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அலுவலகம் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து சென்றதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதே நிறுவனம் மீது பெங்களூருவில் உள்ள ராஜகோபாலபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல அதிக வட்டி தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை பதிவிட்டு பொதுமக்களை ஏமாற்றியதாக ஆருத்ரா நிறுவனம், ஐஎப்எஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. சோதனையின் முடிவிலேயே எவ்வளவு நபர்களிடம் இந்நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களை ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற இளைஞர் கைது