நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள அரவங்காடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று ஏற்பட்ட பெண் ஊழியர் உள்பட அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர்க்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மாதிரி எடுக்கப்பட்டது. இதில், இங்குள்ள மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவரின் மகனுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால், இவர்கள் இருவரும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மாணவர் பள்ளிக்குச் சென்று வந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், பள்ளியும் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்திய நிலையில் மணமகனின் தந்தைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் கரோனா மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2ஆவது அலை இன்னும் தொடங்கவில்லை எனவும், இது முதல்நிலை கரோனா தான் எனவும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மு.க. ஸ்டாலின் விட்ட சவால் முதல் கமலின் ஆட்டோ பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்