தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து; இதுவரை 8 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு! - முக ஸ்டாலின்

Coonoor Tourist Bus Accident: தென்காசியில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து குன்னூர் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 9:03 PM IST

Updated : Sep 30, 2023, 9:42 PM IST

நீலகிரி: தென்காசியில் இருந்து 2 ஓட்டுநர்கள் உடன் 57 பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் ஊட்டியில் இருந்து இன்று (செப்.30) மாலை தென்காசி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்து உள்ளனர். இந்த நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 9வது கொண்டை ஊசி வளைவின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதனையடுத்து இது குறித்து அறிந்த மீட்புப் படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை காவல் துறையினர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளனர். மேலும், மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் அரசு மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “தென்காசி மாவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்குச் சென்றவர்கள் இன்று தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில், பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (வயது 64), தேவிகலா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள ‘X' பதிவில், “தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலாp பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது 1077 மற்றும் 9443763207 என்ற ஹெல்ப் லைன் எண்களும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: 2010 எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வாகன விபத்தில் உயிரிழப்பு!

Last Updated : Sep 30, 2023, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details